தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.
அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலையியல் குழு ஒன்று நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பணியகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்து அறியும் கூட்டம் ஒன்றை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்,
”தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளில் 70 வீதமானோர் தமது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிச் செல்லவே விரும்புகின்றனர்.
10 வீதமானோர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்லத் தயார் என்கின்றனர்.
20 வீதத்தினர் மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.