சிறி ரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், அங்கு 82.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக சிறி ரங்கம் தொகுதியில் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
காலை 7 மணிக்கு வாக்குபதிவுகள் ஆரம்பமாகி மிகவும் சுறுசுறுப்பான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.
இந்த தேர்தலில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க. சார்பில் எஸ். வளர்மதி, தி.மு.க. சார்பில் என். ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே. அண்ணாதுரை, பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் எம். சுப்ரமணியம் ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து, பதவிநீக்கம் செய்யப்பட்டதனால், ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே, முன்னர் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிறி ரங்கம் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.