இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன.
நிலம் இல்லாததால் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தும் நோக்கோடு இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலத்தை எளிதாகக் கையகப்படுத்த இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது என்றும்,அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம், விவசாயிகளின் நலனைக் கடுமையாகப் பாதிக்கும் என இதன் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் டில்லியில் நேற்று நடாத்தப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், சமூகப் போராளி மேதா பட்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தமிழக விவசாயிகள் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய நிலம் கையகப்படுத்தும் சட்டம், நிலங்களை விவசாயிகளிடமிருந்து தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்துவதை கடினமான ஒன்றாக மாற்றியிருந்தது.
தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கும் திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் 70 சதவீத உரிமையாளர்களின் ஒப்புதல் தேவை. தனியார் திட்டங்களுக்கு 80 சதவீத உரிமையாளர்கள் சம்மதமளிக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் பாதுகாப்பு, கிராமப்புற கட்டமைப்பு, விலை குறைந்த வீடுகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியது.
இம்மாதிரியான திட்டங்கள், மக்களின் நிலம், வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம், பொருளாதார, பண்பாட்டுத் தாக்கம் ஆகியவை குறித்து ஒரு சுயேச்சையான நிபுணர் குழுவின் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அரசு நீக்கியது.
இந்த அவசரச் சட்டத்தை தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கடும் சிக்கலை பாரதீய ஜனதாக் கட்சி அரசு சந்தித்துவருகிறது.