இன்று நடைபெற்ற உலக கிண்ண போட்டித் தொரில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது இந்தியா.
போட்டியில் முதலில் பந்தடித்த ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
முப்பத்து மூன்று ஓவர்கள் மூன்று பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நூற்றிரண்டு ஓட்டங்களை எடுத்தது சிற்றரசுகள்.
நூற்று மூன்று ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துப்பாட்ட களத்தில் இறங்கியது இந்தியா.
இன்றைய ஆட்டத்தில் 14-ஓட்டமெடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன் பிறகு, இந்தியா விக்கெட்டுக்கள் எதனையும் இழக்கவில்லை. பதினெட்டு ஓவர்கள் ஐந்தாம் பந்தில் நூற்று நான்கு ஓட்டங்களையெடுத்து, வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டது இந்தியா.
காலை ஆக்லந்தில் நடைபெற்ற விறுவிறுப்பான Pool A ஆட்டத்தில் பரம வைரிகளான நியூசிலந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பந்தடித்தது ஆஸ்திரேலியா.
முப்பத்து இரண்டு புள்ளி இரண்டாவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா.
அது எடுத்தது நூற்றைம்பத்தொரு ஓட்டங்கள் மட்டுமே. நியூசிலந்துக்கான வெற்றி இலக்கு நூற்றைம்பத்து இரண்டு ஓட்டங்கள். ஆனால், எளிதான அந்த இலக்கை எட்ட விடாமல், விறுவிறுப்பாக ஆடியது ஆஸ்திரேலியா.
இறுதியில், இருபத்து மூன்றாவது ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலந்து. பந்தடிப்பதில் திணறினாலும் அபார பந்து வீச்சால் ஆட்டத்தை வென்றது நியூசிலந்து.