இரண்டு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கண் உபாதைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஈ. சமன் என்ற இந்த கைதி போதைப்பொருள் விற்பனை சம்பந்தமாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளதுடன் அவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த கைதி உட்பட 23 கைதிகள் பல்வேறு சிகிச்சைக்காக இன்று முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கைதிகளுடன் இரண்டு சிறைச்சாலை அத்தியட்சகர்கள், 11 சிறைச்சாலை காவலர்களும் சென்றிருந்தனர்.
தப்பிச் சென்ற கைதியான ஈ. சமன் மற்றும் இன்னுமொரு கைதியை இந்த இரண்டு அதிகாரிகளே கண் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை எங்கேனும் அழைத்துச் செல்லும் போது அவருடன் செல்லும் அதிகாரி துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது மரபு. எனினும் ஈ. சமன் என்ற கைதியை அழைத்துச் சென்ற அதிகாரிகள் துப்பாக்கியை எடுத்துச் செல்லவில்லை என தெரியவருகிறது.