இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், மூத்த அரசியல்வாதியுமான ஏ.பி.பரதன் சனிக்கிழமை இரவு காலமானார்.
புதுடில்லியில் காலமான அவருக்கு வயது 92.
கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்தியாவின் இடதுசாரி அரசியல் மற்றும் தொழிற்சங்கத் துறையின் முக்கியமான ஒரு ஆளுமையாக அவர் திகழ்ந்தார்.
மராட்டிய மாநிலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த அவர், 1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அரசியலில் படிப்படியாக உயர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டு செயலாற்றினார்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தலைநகர் டில்லிக்கு தனது அரசியல் தளத்தை மாற்றிக்கொண்ட பரதன், கட்சியின் துணைப் பொதுச்செயலராகி பின்னர் இந்தர்ஜித் குப்தாவிற்கு பிறகு பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.