பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் அமர்ந்த கங்குலி, முதல் தர போட்டிகளில் ஆடும் உள்ளூர் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகில், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, பி.சி.சி.ஐயின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, முன்னாள் வீரரே வாரியத்தின் தலைவராக தேர்வாகியுள்ளதால், வீரர்களின் தேவை அறிந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் போட்டி நாள் சம்பளத்தை அவர் உயர்த்தப் போவதாக தெரிய வந்துள்ளது.
இதற்காக கங்குலி, அடுத்த வாரம் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட்டை சந்திக்க உள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டம் பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் போட்டி நாள் சம்பளத்தை, ரூ.35,000-த்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி கங்குலி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தான் கூறியது போலவே கங்குலி, உள்ளூர் வீரர்களுக்கான வசதி, வாய்ப்புகளை அதிகரிக்கும் பணியை முதல் வேலையாக துவங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.