கிளிநொச்சியில் ஒருவரை கடத்தி, அவரின் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று (25) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இந்த தீர்ப்பை வழங்கினார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிராம் விஜிதன் என்பவர் 2015ம் ஆண்டு ஒகஸ்ட் 18ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார்.
ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று பொலிசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 9 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்திலிருந்து சிறிராம் விஜிந்தன் மீட்கப்பட்டார்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 3 லட்சம் ரூபா பணத்தை வாங்கிக் கொண்டு கஞ்சாவை வழங்காத காரணத்தினால், தாம் அவரை கடத்திச் சென்றதாக சந்தேகநபர்கள் 9 பேரும் தெரிவித்திருந்தனர்.
2015ம் ஆண்டு ஒகஸ்ட் 18ம் திகதி கிளிநொச்சியில் நபரைக் கடத்தும் பொது நோக்குடன் சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராகச் செயற்பட்டமை, நபரை கடத்தி சட்டவிரோதமாகச் சிறைப்படுத்தும் பொது நோக்குடன் செயற்பட்ட கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை, நபரின் உடமையிலிருந்த 58 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கசச்சங்கிலி, 36 ஆயிரம் ரூபா பெறுமதியான கைச்சங்கிலி மற்றும் 24 ஆயிரம் ரூபா பெறுமதியான மோதிரம் என்பவற்றைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரிகள் 9 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2017ம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சட்ட மா அதிபரால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
மொகொமட் நஜிமுடீன் மொகொமட் சியாம், மொகமட் இப்ராஹிம் மரிக்கார் மொகொமட், மொகொமட் சஹீட் மொகொமட் ஹில்மி, மொகொமட் பைஸால் மொகொமட் பஸ்லு, வர்ணகுலசூர்ய ஜூட் ஜானக பெர்னாந்து, டாவுட் ஷாகி மொகொமட் அசான், ஹேரத் பத்திரணாலேக வந்தனா குமாரதுங்க, சரிஜோன் மொகொமட் ரிஸ்வான் மற்றும் அப்துல் ரஹிட் மொகொமட் நிஸான்டீன் ஆகிய 9 பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.
எதிரிகள் மீதான 5 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு 9 பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.