இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு பாடசாலை மாணவர்களை அழைப்பது தொடர்பில் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சு முதலில் இதற்கு அனுமதி மறுத்ததோடு, பின்னர் அதற்கு அனுமதி வழங்கியுள்ள விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பயிற்சி பிரிகேடியர் ஊடாக, பிரிகேடியர் நிர்வாகத்திற்கு அனுப்பிய தகவலுக்கு அமைய, சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி முகாம் 2021 ஜனவரி 25 முதல் பெப்ரவரி 4 வரை கொழும்பின் நாலந்தா கல்லூரி மற்றும் ஆனந்த மகளிர் வித்தியாலயத்திலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாடசாலை மாணவர்களை பயன்படுத்த கல்வி அமைச்சின் செயலாளர் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது அவர்களை ஆபத்தில் தள்ளும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி.கே.பெரேரா ஜனவரி 20ஆம் திகதி அனுப்பி வைத்துள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் படி, நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், 152 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 300 பாடசாலை மாணவர்கள் இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், அணிவகுப்பு பயிற்சிக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கழித்து கல்வி அமைச்சு தனது முடிவை மாற்றியுள்ளது. கல்விச் செயலாளருக்கு பதிலாக, மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் மற்றும் அளவுகோல்களுக்கு உட்பட்டு மாணவர்கள் பங்கேற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் கடிதத்தின் நகலை கல்விச் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களின் அனுமதி பெறப்பட வேண்டும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெற்றோரின் முழு அனுமதியை எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டுமெனவும், ஒவ்வொரு பாடசாலையின் மாணவர்களுக்கும் பொறுப்பாக ஒவ்வொரு ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனின், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஆலோசனையைப்பெற்று அதன்படி செயற்பட விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் போது கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அந்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“73 வது சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது உங்கள் பொறுப்பு எனவும், மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாடு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் 300 மாணவர்களை ஒன்றிணைக்கும் பயிற்சி முகாமை நிறுத்துமாறும் பயிற்சி குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு பாடசாலைகளில் மாணவர்களுடன் குறைந்தபட்சம் 150 ஆசிரியர்களும் முகாமிட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அவர்களை பொறுப்பேற்பது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாடசாலை மாணவர்களை தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதைவிட, அவர்களை அந்த அச்சுறுத்தலில் இருந்து மீட்பதன் முக்கியத்துவத்தை ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.