இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவிற்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள சரத்து ஒன்று முதல் தடவையாக 35 ஆண்டுகளின் பின்னர் நிறைவேறியுள்ளது.
இது இந்தியாவிற்கு கிடைத்த முதலாவது வெற்றியாகும் என இலங்கையின் அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
இரண்டாவது உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டதாக் கூறப்படும், தெற்காசியாவின் மிக முக்கியமான நூறு எரிபொருள் தாங்கிகள் திருகோணமலை துறைமுகம் அருகில் காணப்படுகிறது.
இவ்வாறு காணப்பட்ட எரிபொருள் தாங்கிகளில் ஒன்று இரண்டாம் உலகப்போரின் போது விமானம் ஒன்று மோதி சேதமடைந்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எஞ்சிய 99 எரிபொருள் தாங்கிகள் இலங்கை வசம் காணப்பட்ட நிலையில், அதனைக் கைப்பற்ற பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
தெற்காசியாவிலேயே இயற்கையாக அமையப்பெற்ற திருகோணமலை துறைமுகம் உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
இதனை பல நாடுகளை கைப்பற்ற முயன்ற போதிலும் அந்த முயற்சிகள் முடியாமல் போனது.
இந்த நிலையில் இந்தத் துறைமுகத்தின் அருகே சுமார் 856 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 99 எரிபொருள் தாங்கிகள் சிலவற்றை உரிய உடன்படிக்கை இன்றி ஏற்கனவே இந்தியா தன்வசப்படுத்தி இருந்தது.
1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் இந்த குறித்த தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், அவை உரிய உடன்படிக்கையின் படி வழங்கப்படவில்லை என அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.