கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் புகையிரத்ததில் சென்று கொண்டிருக்கிறேன். பணிஸ் சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருந்தது.
சிற்றுண்டிச்சாலை சென்று 20 ரூபாத் தாளைக் கொடுத்து ஒரு பணிஸ் தரச் சொல்லிக் கைப்பாசை காட்டினேன். ஒரு பணிசைத் தந்தார்.
அப்போது பணிசின் விலை 5 ரூபா. ஆகவே மிச்சக் காசைத் தரச் சொல்லித் திரும்பவும் கைப்பாசை காட்டினேன். அவன் சிங்களத்தில் ஏதேதோ பேசி என்னை வெருட்டினான்.
அப்போது கன்ரீனுக்கு வந்த ஒருவரிடம் உங்களுக்குச் சிங்களம் தெரியுமா , எனக் கேட்டேன். ஆம் என்றார்.விசயத்தைக் கூறினேன். அவர் சிங்களத்தில் மிச்சக் காசு 15 ரூபா கேட்டார். அவரையும் வெருட்டிப் பேசிக் கலைத்தான்.
அப்போது தான் புரிந்தது சிங்கள மொழி தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே “ பணிஸ் எக்கக் கீயத? “எனக் கேட்டிருந்தால் 15 ரூபா ஏமாந்து இருக்கத் தேவையில்லை.
கொழும்பு புறக்கோட்டையில் பணஹாய், பணஹாய் என பெல்ற் விற்பவரிடம் அகப்பட்டு 500 ரூபா கொடுத்து பெல்ற் 450 ரூபா ( ஹாறசீய பணஹய்) அதற்கு 5 ஓட்டை போட்டதற்கு ஒவ்வொரு ஓட்டைக்கும் 20 ரூபாப்படி 100 ரூபா என மேலதிகமாக 50 ரூபா கொடுத்து ஏமாந்த கதைகளும் உண்டு.
1997 இல் திருகோணமலையில் அரசாங்க வேலை கிடைத்தவுடன் செய்த முதல் வேலை ஓடியோடிச் சிங்களம்படித்தது. அந்த அறிவை வைத்துக் கொண்டு இன்று வரையில் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை போகின்றது.
இந்தியா போன்ற நாட்டில் பிறந்திருந்தால் 06 மொழிகளில் பேசக் கற்றிருக்கலாம் என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு. என வேதநாயகம் தபேந்திரன் இலங்கை தமிழர் முகநூலில் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.