இலங்கை மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு செல்ல தாம் தயாராகவே இருப்பதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று கோரி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது
முதலமைச்சரின் யோசனைப்படி, 80 கோடி மதிப்பிலான 40,000 தொன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கான 500 தொன் பால் மா மற்றும் பிற பொருட்களை அனுப்ப தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் மூலம் இந்த பொருட்கள் அனுப்பப்படவுள்ளன. இந்தநிலையில் முதலமைச்சரின் திட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்க தலைவர் ஜேசுராஜா, தமிழகத்தின் நிவாரணப்பொருட்களை தங்கள் இயந்திர படகுகள் மூலம் இலங்கைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மக்கள் கஷ்டப்படும் போது, அவர்களுக்கு உதவ தாங்கள் தயாராகவே இருப்பதாக ஜேசு ராஜா கூறியுள்ளார்