ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் புற்றீசல்களை போல வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு ஒலிப்பதிவை கேட்டு முடிப்பதற்குள் நான்கைந்து வெளியாகி விடுகிறதே என சிங்கள நெட்டிசன்கள் திக்கித் திணறிப் போயுள்ளனர்.
ரஞ்சனின் வீட்டிலிருந்த ஆவணங்களை பொலிசார்தானே எடுத்தார்கள், இந்த ஒலிப்பதிவுகள் எப்படி வெளியாகிறது? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன என ஐ.தே.க எழுப்பும் கேள்வியை கவனிக்க நெட்டிசன்களிற்கு நேரமில்லை. ஏனெனில், ஒவ்வொரு ஒலிப்பதிவும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறது.
அரசியல் உரையாடல்களில் தொடங்கி, அஜால் குஜால் கதைகள் வரை பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது உரையாடல்கள்.
சிங்கள திரைப்பட நடிகரான ரஞ்சனிற்கு, சிங்கள நடிகைகளுடன் நல்ல பரிச்சயம் இருக்கிறது. இதனால், ரஞ்சனின் ஒலிப்பதிவில் நடிகைகளும் தாரளமாக சிக்கியுள்ளனர்.
பியுமி ஹன்சமாலி யுடனான உரையாடல் நேற்று வெளியாகியது. இது நடிகைகள், அரசியல்வாதிகளின் மகன்கள், நைட்கிளப் விவகாரங்கள் பற்றிய உரையாடலாக அமைந்துள்ளது.
போதைப்பொருள் பாவிக்கும் சில நடிகைகள் பற்றியும் அதில் உரையாடப்பட்டுள்ளது.
இன்றும், நடிகையொருவருடனான உரையாடல்கள் வெளியாகியுள்ளது.