ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வுஹானிலுள்ள ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சீன அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கொடிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 69,000 பேருக்கு நோய்த்தொற்றை உருவாக்கி, சீனாவில் மட்டும் 1,665 பேர் உயிரை பலி வாங்கியுள்ளது.
இந்நிலையில், வுஹான் மீன் சந்தைக்கு 900 அடி தொலைவில் அமைந்திருக்கும் ஆய்வகம் ஒன்றிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதேயன்றி, வௌவால்களிடமிருந்து பரவியிருக்க வாய்ப்பு குறைவு என சீன அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன பல்கலைக்கழகம் ஒன்று, வுஹானிலுள்ள நோய் தடுப்பு மையமான Wuhan Center for Disease Control (WHCDC)இலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியிருக்கலாம் என தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
WHCDC ஆய்வு மையம், 605 வௌவால்கள் உட்பட நோய்த்தொற்று உள்ள ஏராளம் விலங்குகளை வைத்திருந்ததாக ஆய்வாளர்கள் Botao Xiao மற்றும் Lei Xiao ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், இந்த ஆய்வு மையத்திற்கு அருகில் ஒரு மருத்துவமனையும் உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்தான் முதலில் பாதிக்கப்பட்டார்களாம். அதனால், அந்த மருத்துவர்களிடமிருந்து சில நோயாளிகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கருதுகிறார்கள்.
என்றாலும், அது குறித்து எதிர்காலத்தில் ஆய்வு செய்வதற்கு, வலிமையான ஆதாரங்கள் தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னொரு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது வுஹானிலுள்ள வைரஸ் ஆய்வகத்திலிருந்தும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்பதுதான் அது.
சார்ஸ் நோயை உருவாக்கிய SARS-CoV வைரஸ், சீன வகை வௌவால் ஒன்றில் இயற்கையாகவே காணப்படுகிறது என்று கூறியிருந்தது இந்த ஆய்வகம்தான்.
அந்த ஆய்வகத்தில், ஒரு ஆய்வாளர், அந்த SARS-CoV வைரஸின் மரபணுக்களைப் பயன்படுத்தி ஒரு புது வைரஸை உருவாக்கியுள்ளார்.
அது மனிதர்களைத் தாக்கும் திறன் உடையது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்த ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் ஒருவேளை வெளியேறியிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.
மொத்தத்தில், கொலைகார கொரோனா வைரஸ், வுஹானிலுள்ள ஆய்வகம் ஒன்றிலிருந்து உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என தங்கள் ஆய்வறிக்கையை நிறைவு செய்துள்ளனர் அந்த ஆய்வாளர்கள்.



















