ஜனாதிபதி கோட்டாபய அவர்களின் வருகையின் பின்னரே இந் நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது எனவும் தற்போதைய எதிர்க் கட்சியினர் கடந்த தேர்தல் காலங்களின் போது செய்த பொய் பிரச்சாரங்களை இப்போதும் செய்து வருகிறார்கள் என முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள கிண்ணியா விசன் மண்டபத்தில்( 29) பொதுஜன பெரமுன கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்து உரையாற்றியபோது,
நாட்டு மக்களின் தேவைகளை உணர்ந்த ஒரு தலைவனாக ஜனாதிபதி கோட்டாபய விளங்குகிறார். கடந்த முப்பது வருட கால யுத்தத்தை வெற்றி கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளங்குகிறார்.
இவ்வாறானவர்கள் இணைந்து நாட்டை சுபீட்சமிக்க செழிப்பான பாதைக்கு அபிவிருத்தியடைந்த நாடாக கொண்டு செல்வார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் எமக்கு கிடையாது.
கோட்டாபய ஆட்சியில் மக்களுக்கு விமோசனம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், மற்றும் ரிஷாட் போன்றவர்கள் பொய் பிரச்சாரத்தை எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு குறை கூறி வருகிறார்கள் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து நிம்மதியாக வாழ்கின்ற சூழ்நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ நல்ல பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறார். வேலை வாய்ப்பில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கல்வியில் பாரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல திட்டங்களை நடை முறைப்படுத்தி வருகிறார்.
நாங்கள் சிறு சிறு கட்சிகளாக இருந்தாலும் கூட பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதனால் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான ஒத்துழைப்புகளை வழங்கலாம்.
1994ல் தான் நாடாளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின் திருமலை மாவட்டம் பல அபிவிருத்திகளை அப்போதைய ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்தவினால் கண்டு கொண்டது மின்சாரம், குடி நீர் திட்டம், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் வேலை வாய்ப்புக்கள் என பல அபிவிருத்திகளை செய்தோம், இது தவிர கிண்ணியாவின் மிக நீண்ட கால தேவையாக இருந்த கடல் மேல் பாலமும் மஹிந்த அரசினால்தான் நிருமானிக்கப்பட்டது.
திருமலை தொடக்கம் புல்மோட்டை வரையான மூன்று பாலங்கள் ,திருமலை தொடக்கம் அம்பாறை வரையான அபிவிருத்திகள் என பல நல்ல திட்டங்களை அமுல்படுத்தி விட்டுத்தான் கடந்த கால எமது அரசாங்கம் இருந்தது.
விவசாயிகள், மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து நாட்டை உயர்ந்த நாடாக மாற்றியமைக்க வேண்டும். 1994, 2000, 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் உங்கள் வாக்குகள் மூலம் நீங்கள் எனக்கான அதிகாரங்களை தந்தீர்கள் இம் முறையும் திருகோணமலை மாவட்டத்தில் பொதுஜனபெரமுனவிற்கு அதிகப்படியான விருப்பு வாக்குகளை பாராளுமன்றத் தேர்தலில் நாம் பெற்றுக் கொடுப்போம் என்றார்.