கென்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை பொதுமக்கள் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞரை பொதுமக்கள் சிலர் சூழ்ந்துகொண்டு கடுமையாக கற்களால் தாக்கியதில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
உள்ளூரில் ஜார்ஜ் கோட்டினி ஹெஸ்ரான் என்று அறியப்பட்ட அந்த நபர், குவாலே கவுண்டியில் உள்ள எம்சாம்ப்வேனி கிராமத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
அவருக்கு வைரஸ் இருப்பதாக சந்தேகித்த சிலர், இரவு 9 மணியளவில் அவர் வீட்டிற்கு நடந்து செல்லும்போது தாக்க முடிவு செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கும்பல் ஜார்ஜுடன் வாக்குவாதம் செய்து, கற்களால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அவர் பலத்த காயமடைந்ததை அடுத்து, அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து Msambweni Subcounty மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.