இந்தியாவின் உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500கிலோ மீற்றர் நடந்து வந்த பெண் மரத்தடியில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இந்தியாவில், ஊரடங்கு உத்தரவுக்கு பின் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக சொந்த ஊர்களுக்கு நடைபயணம் செய்து வருகின்றனர்.
இந்த நடை பயணத்தின் நடுவில் பலரும் உணவு இன்றி, உடல் நலகோளாறு ஏற்பட்டு, மற்றும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீற்றர் தூரத்தை கால்நடையாகக் கடந்து 26 வயது பெண் ஒருவர் சாலையோர மரத்தின் கீழ் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
அந்தப் பெண் மத்திய பிரதேசத்தில் உள்ள தாரில் இருந்து ஏறக்குறைய 12 பேருடன் சாலை வழியே அணிவகுத்து நடந்தேச் சென்றுள்ளார். பயணத்திற்காகப் புறப்பட்டபோது எட்டரை மாதம் கர்ப்பமாக இருந்தார். பல மையில் நீண்ட நடை பயணத்திற்குப் பிறகு, பாலபீட் கிராமத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது அதிர்ஷ்டவசமாக, குழுவில் இருந்த மற்ற பெண்களின் உதவியுடன் மரத்தடியில் குழந்தையை நல்லபடியாக பிரசவித்துள்ளார்.
பின்னர், பாலபீட் கிராமத்தின் தலைவர் அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவை வரவழைத்துள்ளார்.
அந்தக் குழு தாய் மற்றும் அவரது பிறந்த குழந்தைக்கு உடனடி உதவிகளை வழங்கியதுடன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளது.
இச்சம்பவம் தொழிலாளர்கள், குறித்து பெருத்த கேள்வி எழ செய்துள்ளது.