காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து இழுத்து கடத்தி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக தனிப்படையினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). அவர் தந்தை ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தாயுடன் தங்கியிருந்தபடி, கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் மகள் சக்தி தமிழினி பிரபா (25).
கார்த்திகேயனும் பிரபாவும் கடந்த மூன்றாண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால், கார்த்திகேயன் பிறப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழினி பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, தமிழினி பிரபாவுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் மேஜர் என்பதால், கடந்த 5-ம் தேதி கோவையில் சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டு, கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளனர். அதன்பிறகு, திருமணமான தகவலை இரு வீட்டாரிடமும் கூறியுள்ளனர்.
ஆனால், தமிழினியின் வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததால், இடையர்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் தங்கியிருக்கிறார் கார்த்திகேயன். இந்நிலையில், தமிழினியின் பெற்றோர், உறவினர்கள் கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்து அவர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, தமிழினியையும் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கார்த்திகேயன், “என் மனைவி தமிழினியின் தந்தை சுந்தர்ராஜ் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 19-ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்குள் நுழைந்த என் மனைவியின் பெற்றோர், உறவினர் என்னையும் என் தாயையும் கொடூரமாகத் தாக்கிவிட்டு என் மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர். நாங்கள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் எங்களைத் தொடர்ந்து தாக்கிச் சென்றுவிட்டனர். செல்லும்போது,`என்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியவர்கள், என் மனைவியையும் ‘செப்டிக் டேங்கில் அடைத்து கொல்லப்போகிறோம்’ என்று கூறினர்.
நானும் என் தாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளோம். இதுதொடர்பாகத் துடியலூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளோம். என் மனைவியை மீட்டு, என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில், தமிழினியின் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், அவர் இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சி செய்வதாகத் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து துடியலூர் போலீஸார், “நாங்கள் யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை. இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள். திருமணத்தைப் பதிவும் செய்துள்ளனர். அவர்கள் சேர்ந்து வாழ்வதை யாரும் தடுக்க முடியாது. புகார் வந்த உடனேயே அது தொடர்பாக வழக்கு பதிவு செய்துவிட்டோம். லாக் டெளன் என்பதால், செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களிடமிருந்து தகவல் கிடைக்க தாமதமானது.
அவர்களின் இடத்தை ட்ராக் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் கார்த்திகேயன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தமிழினி பிரபா நைட்டியுடன் இருப்பதும், அவரை ஒரு கும்பல் அடித்து இழுத்து கடத்திச்செல்வதும், அதை தடுக்க வந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்களை கும்பல், கட்டை மற்றும் கற்களை தூக்கி வீசி விரட்டுவதும் பதிவாகி இருந்தது.
அத்துடன் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே அந்த வீடியோவில் வருவது யார் என்பது குறித்தும், தமிழினி பிரபா கடத்திச்சென்றது குறித்தும் தனிப்படை போலீசார் திருச்சியில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆணவப் படுகொலை அதிகரித்து வரும் நிலையில், சக்தி தமிழினி பிரபாவையும் அவர் பெற்றோர், உறவினர்கள் ஆணவப் படுகொலை செய்துவிட வாய்ப்புள்ளது. எனவே, அவரை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



















