இம்முறை பொதுத்தேர்தலில் எவ்வித சவால்களும் இல்லை எனவும் சவால்கள் இல்லை என்பதால், தேர்தல் உற்சாகமற்று காணப்படுவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்தானந்த அளுத்கமகேவை ஆதரித்து நாவலப்பிட்டி குருந்துவத்த பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகள் நாட்டிற்காக எந்த வேலைகளும் நடக்கவில்லை. ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருந்ததே இதற்கு காரணம்.
ஜனாதிபதி கூறுவதை பிரதமர் செய்யவில்லை. பிரதமர் கூறுவதை ஜனாதிபதி செய்யவில்லை என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இதனால், ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு இடையிலான போட்டியே உள்ளது.
இம்முறை தேர்தல் ஒரு கட்சி தேர்தல் போல் எனக்கு தோன்றுகிறது. எதிர்க்கட்சி இல்லாமல் போனால், தேர்தல் அழுப்பாக இருக்கும். நான் 50 ஆண்டுகள் அரசியலில் இருக்கின்றேன். அனைத்து தேர்தல்களிலும் பெரிய போட்டி காணப்படும். பெரிய சவால்கள் இருக்கும்.
எனினும் இம்முறை எவ்வித சவால்களும் இல்லை. நாங்கள் அமோக வெற்றியை பெறுவோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாங்கள் பெற்றுக்கொள்வோம். நாட்டில் பொருளாதாரத்தை மீட்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



















