டெல்லியில் கொரேனா தொற்று தடுப்புக்கான பிபிஇ கிட் பாதுகாப்பு உடைகளை அலட்சியமாக பொதுவெளியில் போட்டவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து, கொரோனா அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நோய் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால், முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்டவை கட்டாயம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதனை புரிந்து கொள்ளாத சிலர், அலட்சியமாக நடந்து கொள்வதால், நோய்த் தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், தான் அணிந்திருந்த பிபிஇ பாதுகாப்பு உடையை அலட்சியமாக வீட்டின் பின் உள்ள மரக்கிளையில் வீசியுள்ளார்.
இது குறித்த வீடியோவை பாலிவுட் இசை அமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி மர்லேனாவை டேக் செய்துள்ள்ளார். ’கொரோனா நோயாளிகள் பிபிஇ கிட்களை அலட்சியமாக போட்டுள்ளார்கள். இது மிகவும் அபாயகரமானமானது மற்றும் ஆபத்தானது. இங்கு வசிக்கும் மூத்த குடிமக்கள் இதனால் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் இதை அவசரமாக கவனிக்க வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட வீட்டில் கொரோனா நோயாளி ஒருவர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து நோய்த் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர், குணமானவுடன் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து டெல்லி மீண்டு வரும் நிலையில், தொற்றை அதிகரிக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்
https://twitter.com/ShantanuMoitra/status/1288685595535925249