முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்பை ஒரு தீவிரமான விஷயமாக கருதவில்லை. அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) கூட்டங்கள் முடிவடைவதற்கு முன்பே வெளியேறினார் என்று முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் புதன்கிழமை (07) சாட்சியமளித்த அவர், முன்னாள் பிரதமர் என்.எஸ்.சி கூட்டங்களில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார் என்று கூறினார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏராளமான பணத்தை பெற்றதாகவும், அந்தப் பணம் தணிக்கை செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கின் பிற நாடுகளில் உள்ள ஹிரா அறக்கட்டளையிலிருந்து ஹிஸ்புல்லா பணம் பெற்றதாக ராணுவ உளவுத்துறை வெளிப்படுத்தியதாக முன்னாள் இராணுவ தளபதி தெரிவித்தார்.
“இராணுவ புலனாய்வு இயக்குநரகம் (டி.எம்.ஐ) தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் அதன் தலைவர் சஹரான் ஹஷீம் குறித்து தேசிய பாதுகாப்பு கூட்டங்களில் 2018 இல் விவாதித்தது. அந்த எச்சரிக்கைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 2018 ஆம் ஆண்டில் திகன கலவரத்தின் போது சஹரான் ஹஷீமின் நடவடிக்கைகள் குறித்து டி.எம்.ஐ தனது அறிக்கையை என்.எஸ்.சிக்கு அறிவித்திருந்தது. திகன சம்பவத்திற்குப் பிறகு சஹரானை கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து டி.எம்.ஐ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்த தகவல்கள் குறித்து யாரும் பரிசீலிக்கவில்லை” என சேனநாயக்க கூறினார்.
சஹரான் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) கருத்தியலைத் தாங்கி வருவதாகவும், சஹரான் முஸ்லீம் இளைஞர்களை ஐ.எஸ் சித்தாந்தத்தைப் பின்பற்ற ஊக்குவிப்பதாகவும், என்.எஸ்.சி கூட்டங்களில் டி.எம்.ஐ தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சஹரானின் ஐ.எஸ் சித்தாந்தத்தை 2018 முதல் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
சஹரான் ஹஷீம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய பாதுகாப்பு அமைப்புக்கள் ஏன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன என்று ஆணைக்குழுஎவினவியது.
அதற்கு பதிலளித்த சேனநாயக்க, நாட்டில் விசாரணை சேவைகளுக்கு இடையே ஒரு போட்டி நிலவுவதாகவும், இந்த விஷயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் டி.எம்.ஐ உடன் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறினார்.
கமிஷனர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சேனநாயக்க, காவல்துறை, குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகள் விசாரணைகளை மேற்கொள்ளும்போது டி.எம்.ஐ உடன் இணைந்து செயல்படத் தவறிவிட்டதாகக் கூறினார். உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில் வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக டி.எம்.ஐக்கு ஒரு பெரிய வலையமைப்பு இருந்ததால், விசாரணைகளை நடத்துவதற்கு டி.எம்.ஐ யின் உதவியைப் பெற்றிருக்க முடியும் என்றார்.