முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு ஊடகவியலாளர்கள் சட்டவிரோத மரக்கடத்தல் காரர்களால் கடந்த 12ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தனர். இதன் எதிரொலியாக அண்மைய நாட்களாக பல்வேறு இடங்களிலும் சட்டவிரோத மரக்கடத்தல்கள் பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டு மரங்கள் கைப்பற்றப்படுகின்றன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகள் கடத்தி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் பொலிசாரால் நேற்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான மரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 29 முதிரை மரக்குற்றிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி செல்ல முற்பட்டவேளை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இதேவேளை 17-10-2020 அன்று இரணைமடு குளக்கரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரம் அறுக்கப்படுவதாக மாங்குளம் பொலீஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த பகுதியில் சென்றபோது காட்டிற்குள் அறுத்து வீழ்த்தி ஏற்றுவதற்கு தயாரான நிலையில் உள்ள 31 பாலை மரக்குற்றிகளையும் பொலீசார் மீட்டுள்ளார்கள். குறித்த பகுதியில் பொலிசார் சென்றவேளை சட்டவிரோத மரக்கடத்தல்காரர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.
இதன் போது நான்கு இலட்சம் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலீசாரால் மீட்கப்பட்டு மாங்குளம் பொலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதிரை மரக்கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்பாணம் சாவகச்சேரியினை சேர்ந்த சந்தேக நபரினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.