மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் வழங்கிய சாட்சியங்களே இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க அரசாங்கம் பயண தடையை விதிக்க காரணம் என்பது அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் பின்னர் தெரியவந்துள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மூன்று பேர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சத்தியக்கடிதங்களை வழங்கியுள்ளனர்.
இந்த மூன்று பேரில் ஒருவர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் என்பதுடன் ஏனைய இருவர் சாதாரண அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மேஜர் ஜெனரல் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. தான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரகசிய கட்டளைகளை வெளியிடும் அதிகாரியாக கடமையாற்றியதாக முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடம் கூறியுள்ளதாக உயர் மட்டப் பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.



















