தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த மர்ம மூட்டைகளை அங்குள்ள மீனவ மக்கள் கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதியான புதுக்குடி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன், தனக்கு சொந்தமான பைபர் படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது கடலின் மேல்பகுதியில் சணல் சாக்கு மூட்டை மிதந்து வந்துள்ளது. அதைக்கண்ட பாலமுருகன் மற்றும் உடன் இருந்த மீனவர்கள் மூட்டையை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர், சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.
மேலும் அதிகாரிகள் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே 14 கஞ்சா பண்டல்கள் இருந்ததுள்ளது.
இதனிடையே, வடக்கு புதுக்குடி கிராமத்திலிருந்து ஆரியசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கிடைத்த மூட்டையிலும் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு பகுதிகளில் கிடைத்த கஞ்சா பொட்டலங்களின் மொத்த எடை 56 கிலோ என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் முத்துக்கண்ணு விசாரணை மேற்கொண்டு சிவகங்கை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமலதாவிடம் மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.