ஊரடங்குக்குப் பின் பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் நாட்கள் குறைக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கொரோனா அபாய பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் வருவோர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி உள்ளது. குறைந்த காலகட்டத்தில் ஒரு பணியை முடிப்பதற்காக பிரித்தானியாவுக்கு வருவோருக்கு இது ஒரு பெரும் பாரமாக காணப்படுகிறது.
இதனால், விமான சேவை மற்றும் சுற்றுலாத்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஊரடங்கிற்குப் பின், அதாவது டிசம்பர் 2ஆம் திகதிக்குப் பின் பிரித்தானியாவுக்கு வருவோர், ஒரு கொரோனா பரிசோதனைக்குப் பின், மிகக் குறைந்த அளவிலான தனிமைப்படுத்தலுக்கு மட்டுமே உட்படுத்தப்பட இருக்கிறார்கள் என போக்குவரத்துச் செயலரான Grant Shapps தெரிவித்துள்ளார்.
அவர், தனிமைப்படுத்தல் எந்த அளவுக்கு குறைக்கப்படும் என்று கூறாவிட்டாலும், அது ஏழு நாட்களாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.