சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் சிறப்பு ஹெலிகொப்டர்களில் வட – கிழக்கெங்கும் பயணித்து நினைவு கூறலுக்கு தடை கோரி வழக்காடுகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம் உயர் கொரோனா தொற்றுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளோ எதுவித தனிமைப்படுத்தலும் இன்றி வட – கிழக்கெங்கும் சிறப்பு விஜயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,
போரினால் இறந்தவர்களை நவம்பர் மாதத்தில் நினைவு கூருவது உலக வழமை. தமிழர்கள் இலங்கை அரசோடு போராடி, உயிர் நீத்த, தம் உறவுகளை கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நவம்பர் மாதமே நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
ஆனாால் அரசாங்கம் இந்த வருட நினைவு கூறலை முடக்க கடுமையான முயற்சியெடுக்கிறது.
காரணம் என்ன? இறந்தர்வகளின் உறவுகள் தம் தந்தை, தாய், சகோதர – சகோதரிகளை நினைவு கூருவதை தடை செய்ய வேண்டும். இதுதான் நோக்கம். இறந்தவர்கள் மீது இத்தனை பயமேன்? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?
இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது. பெரும்பான்மை மக்கள் மாத்திரம் இறைமையை அனுபவிக்கும் போது, ஏனையோர் தமக்கான உரிமையைத் தாமே தேடிக் கொள்ளும் நிலையை அரசாங்கமே உருவாக்குகிறது” என்றார்.