ஏறாவூர் நகரில் 874 பேரிடமிருந்து கொரோனா வைரஸ் பீ.சீ.ஆர் மாதிரிகள் பெறப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷபிறா வஸீம் தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பரிசோதனைகள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதியிலிருந்து நவம்பர் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் மேல் மாகாண கொரோனா வைரஸ் தொற்று கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.
மீன் வியாபாரிகள், வாகன சாரதிகள் உள்ளிட்ட தொற்றுக்கு உள்ளாகக்கூடிய சாத்தியப்பாடான பிரிவினரை இலக்கு வைத்தே பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.