எந்த நாட்டுடனும் இலங்கை கூட்டணி அமைக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வோய் போஃங்கின் இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் சீன ஊடகங்கள் இதனைக் கூறியுள்ளன.
சீனாவுடனான இருத்தரப்பு உறவுகளை வலுப்படுத்த தான் முன்னுரிமை வழங்கி இருப்பதாகவும் சீனாவின் அபிலாஷை சம்பந்தமான விடயங்களுக்கு கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவம் உட்பட பலதுறைகளில் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.
இலங்கை சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருவதுடன், பிராந்தியத்திற்கு அப்பால் உலக வல்லரசுகளின் அதிகாரங்களுக்கு அடிப்பணியாது எனவும் எந்த நாட்டுடனும் இலங்கை கூட்டணி அமைக்காது என ஜனாதிபதி கோட்டாபய, சீன பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியதாகவும் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.