குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தூக்கிட்டு உயிரிழந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் பகுதி கசுவா கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வராஜ் (65). இவரது மகள்கள் ஹேமலதா (35), சாந்தி (31).
இவர்கள் குடியிருந்த வீடு சில தினங்களாக திறக்கப்படாமலும், துர்நாற்றம் வீசியும் காணப்பட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார் கதவை அடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செல்வராஜ், அவரது இரு மகள்கள் ஆகியோர் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். மூன்று உடல்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது வீட்டில் காவல் துறையினர் ஆய்வு செய்த போது, குடும்ப பிரச்சினை காரணமாக மனஅழுத்தத்தில் இருந்துள்ளதால் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
மேலும் அவர்களுக்குச் சொந்தமான வீடு, சொத்துகளை, கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மனைவியின் உயிரிழப்பால் செல்வராஜ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவரது மூத்த மகளுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
கடைசி மகளுக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மகள் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மூவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.




















