யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைக்குலைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு அப்பகுதி மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீர்வேலி வாழைக்குலை சங்கத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று தாக்கத்தினால் பல்வேறு தொழில் துறையினரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு பாதிப்புகளை எதிர்நோக்கும் உற்பத்தித் தொழில் துறையினரை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி, அடிப்படைத் தேவைகளான உணவு பொருட்கள், எரிபொருள், நீர் விநியோகம் போன்றவற்றில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி அதற்கான செயற்திட்டங்களையும் உருவாக்கியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் அதிக அளவிலான வாழைக்குலை செய்கையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களை வழங்குவதை கணிசமான பங்கு வகிக்கின்றனர்.
வாழைக்குலை செய்கையாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நீர்வேலி வாழைக்குலைச் சங்கத்தினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
ஏனெனில், அவர்களுக்கு விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பெறும் இடங்கள் அனேகமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
யாழ்ப்பாணத்திலிருந்து வழமையாக எடுத்துச்செல்லப்படும் வாழை குலைகள் மட்டக்களப்பு, மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
எனவே யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வோர் தொடர்பாக அப்பகுதி மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடி உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லும் வர்த்தகர்கள் யாழில் இருந்து உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















