நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பீதியால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளை நிறைய பேர் தேடிப்பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் ஐஸ்கிரீம்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதில் சாச்சுரேட்டட் கொழுப்பு(saturated fat ) மற்றும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால் ஐஸ்கிரீம்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சாக்லேட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஒயின், பீர் உள்பட எந்தவகையான மதுவாக இருந்தாலும் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும். அதுதவிர பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும் எனர்ஜி பானங்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறானவை. அதில் இருக்கும் காபின் தூக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இரவில் சரியாக தூங்காவிட்டால் அதுவே நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை மோசமாக்கி விடும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கில் தயாராகும் சிப்ஸ்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கலாம். ஆனால் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானவை. அவற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
துரித உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியவை. அதில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரை, சோடியம் போன்றவை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்க வைத்துவிடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உப்பில் கலந்திருக்கும் சோடியம் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை முடக்கும் தன்மை கொண்டவை.
உடல் பருமனும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பங்கம் விளைவிக்கும். உடல் எடையும், உயரமும் சீராக இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு திறனின் செயல்பாடுகளுக்கு இடையூறாகிவிடும்.