சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில் விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானிடைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.
அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங்களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்.