பருத்தித்துறை நகரம் இன்று மாலை முதல் மறு அறிவித்தல் வரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜே/401 கிராம சேவகர் பிரிவு முற்றாக முடங்கியுள்ளது. குறித்த பிரதேசத்தில் மருந்தகங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரில் இருந்த பஸ் தரிப்பிடம் மூடப்பட்டுள்ளதால் மருதடி பகுதியிலுள்ள டிப்போவிலிருந்து பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, தும்பளை வீதி, பத்திரகாளி வீதி, வீ.எம். வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி அனைத்திலிருந்து நகருக்குள் உள் நுழைய முடியாது என்றும் சுகாதாரத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரமான ஜே/401 கிராம சேவகர் பிரிவில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் சிலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகரப் பகுதி வியாபாரிகள் சிலரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் குறித்த பிரதேசத்தில் அதிக தடவைகள் நடமாடியுள்ளனர்.
இந்தப் பிரதேசம் அதிக கொரோனாத் தொற்று அபாயம் மிக்க பகுதியாக அடையாளம் காணப்பட்டதால் மறு அறிவித்தல் வரை முடக்கத் தீர்மானித்தோம் என்றனர்.