ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல பெண்களுக்குக் கட்டாயத் திருமணங்கள் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிஎன்என் வெளியிட்ட செய்தியில், ‘தலிபான்கள் மீதுள்ள அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் முனைப்பில் காபூல் விமான நிலைய முகாம்களில் பெற்றோர்களே பெண்களுக்குக் கட்டாயத் திருமணங்கள் நடத்துகின்றனர்.
சிலர் பொய்யான திருமணச் சான்றிதழ்கள் பெற்றும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது.
இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறிய நிலையில் லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் தங்கள் ஆட்சியில் பெண் அமைச்சர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.