கனேடிய நகரம் ஒன்றில் இந்திய இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்நகரில் வாழும் இந்திய சமூகத்தினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதால் பலரும் இரவுப்பணியை தவிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Prabhjot Singh (32), கனடாவின் Nova Scotiaவிலுள்ள Truro என்னும் சிறிய நகரத்தில் வாழ்ந்துவந்த இந்திய இளைஞர். பகுதிநேர டாக்சி சாரதியாக பணிபுரிந்துவந்த Prabhjot கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் படுகாயமடைந்த நிலையில் இரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. தனது காயங்கள் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
Prabhjot சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். Layton’s Taxi என்ற நிறுவனத்தில் அவர் டாக்சி சாரதியாக பணியாற்றிவந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் அந்நிறுவனத்தின் தலைவரான Darlene MacDonald என்ற பெண்ணுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது, அவரது பணியாளர்களில் ஒருவர் தன்னால் பணிக்கு வர இயலாது என்று கூற, அவர் காரணம் கேட்டிருக்கிறார். அப்போதுதான், Prabhjot கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதனால் தன்னால் பணிக்கு வர இயலாது என்றும் அந்த பணியாளர் கூற, அப்போதுதான் Darleneக்கு Prabhjot உயிரிழந்த செய்தி தெரியவந்துள்ளது.
அந்த செய்தியைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள Darlene, கூடவே மற்றொரு தகவலையும் வெளியிட்டுள்ளார். தன்னிடம் சாரதிகளாக வேலை பார்த்த நான்கு பேர் வேலையிலிருந்து நின்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் Darlene.
Truro நகரில் இரவுப்பணிக்கு ஆட்கள் வராததால் பல அலுவலகங்கள் இரவு நேரத்தில் மூடபட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
அதாவது, Truro நகரில் பல அலுவலகங்களில் இரவு நேரப் பணியை கவனித்துக்கொண்டது இந்தியர்கள்தான். குறிப்பாக சீக்கியர்கள், அதுவும், Prabhjotஇன் நண்பர்களும் உறவினர்களூம்…
தற்போது அதிகாலையில் Prabhjot கொல்லப்பட்டதால், இந்திய சமூகத்தினர் அச்சத்தில் இருப்பதால் இரவுப்பணியை தவிர்க்கிறார்களாம். ஆகவே, இரவுப்பணிக்கு ஆட்கள் இல்லாததால், இரவு நேரங்களில் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Darlene.
கொல்லப்பட்ட Prabhjot, இந்தியாவிலிருக்கும் தன் தாய்க்கு உதவுவதற்காக மூன்று இடங்களில் பகுதி நேர வேலை பார்த்துவந்தார் என்று கூறும் Darlene, எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், புன்னகை மாறாமல் பேசக்கூடியவர் என Prabhjotஐ நினைவு கூர்கிறார்.