இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைப் போன்று எந்த வேளையிலும் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு தகவல் ஒன்றை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்டுள்ளார்.
நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய இளைஞரைப் போல அடிப்படைவாத சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலர் தாக்குதல்களுக்கு தயாராகியுள்ளமை பற்றிய முழு விபரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தாம் தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய நேர்காணலில் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அடிப்படைவாதத்தை சிந்தனையில் ஏற்றிக்கொண்ட இளைஞர்களை எந்தச் சந்தர்ப்பமாகிலும் தாக்குதலுக்குப் பயன்படுத்த முடியும். இதுபோன்ற பயிற்சி மற்றும் போதனைகளைப் பெற்ற திரளான இளைஞர்கள் இலங்கையில் இருக்கின்றனர்.
நியூஸிலாந்தின் ஓக்லாண்டில் அண்மையில் இலங்கைப் பிரஜை ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார். அந்நாட்டுப் பிரதமர் அதனை அறிவித்திருந்தார்.
குறித்த நபர் பற்றி 2017ஆம் ஆண்டிலிருந்து விசாரணை செய்ததோடு பின்னர் கைது செய்யப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்தும் அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினரது கண்காணிப்பில் தான் இருந்தனர்.
அடிப்படைவாத சிந்தனையை தலையில் வைத்துக் கொண்டிருக்கின்றவர் ஆயுதமற்ற தற்கொலை குண்டுதாரி. ஆகவே அப்படியான இளைஞர்கள் இன்றும் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான பிரதான சூத்திரதாரியை பாதுகாப்புத் துறையினர் இன்றும் தேடிவருகின்றனர். 30 வருடப் போர் முடிந்த பின்னர் இதுபோன்ற குண்டுகள் வெடிக்காது என்று நினைத்த காலத்தில் தான் மிலேச்சமான தாக்குதல் இடம்பெற்றது.
மேலும் தாக்குதல் நடத்தக்கூடிய தரப்பினர், தாக்குதல் காலம் கூட எனக்குத் தெரியும். அவை பற்றிய முழுத் தகவல்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றேன். அவர்கள் எந்த வேளையிலும் எந்த இடத்திலும் மற்றுமொரு தாக்குதலை நடத்தலாம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலுள்ள உறுப்பினர்கள் எனக்கு முன்னே முன்னிலையாகினால் இதுபற்றிய தகவல்களை அம்பலப்படுத்துவேன் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.