பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தமை தொடர்பிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
ஞானசார தேரர், அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணமென்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது இதனால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர்.
எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.



















