ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயனர்களுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்காமல் போனது. நெட்வொர்க் பிரச்சினை காரணமாக பயனர்கள் சிக்னல் குறைபாடு, இணைய சேவையில் இடையூறை சந்தித்தனர். ஜியோவின் நெட்வொர்க் பிரச்சினை மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பரவலாக ஏற்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நெட்வொர்க் பிரச்சினையை சில மணி நேரங்களில் தங்களின் குழு சரிசெய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில், ஜியோ சார்பில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் சலுகை வழங்கப்படுகிறது.
இரண்டு நாள் வரம்பற்ற சலுகை குறித்த விவரம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட இருக்கிறது. இந்த சலுகை நள்ளிரவில் செயல்படுத்தப்படும். பயனர்களின் தற்போதைய சலுகை நிறைவுற்றதும், இரண்டு நாட்களுக்கான வரம்பற்ற சலுகை வழங்கப்படும். இதன் காரணமாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை, பயனர்கள் 30 நாட்கள் பயன்படுத்தலாம்.