யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த பத்திரத்தினை சமர்பிக்கும் போதே தமது கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்திருக்க முடியும் எனவும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இது பற்றி பேசுவது தவறு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்தல் உட்பட LNG கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக 11 அரசாங்கக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் சில அமைச்சர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தை விமர்சிக்காமல் அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு வெளியேறி சமூகத்தில் எதனையும் கூற வேண்டும் என பின்வரிசை உறுப்பினர்கள் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய,வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தந்தவுடன் இது தொடர்பில் விளக்கமளிக்க குழுவொன்று தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



















