உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006ஆம் ஆண்டு முதல் வடகொரியா அணு குண்டுகளை பரிசோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு சபைகடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த சோதனைக்கு மத்தியில் அங்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
உணவுப்பொருட்கள் விநியோகம் முறியடிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்போதையை நிலைமையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) 1990களில் அங்கு நிலவிய பஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளார்.
‘ஆர்டியஸ் மார்ச்’ என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் செத்து மடிந்தது வரலாற்றின் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் உன் அரசாங்கம் சமீபத்தில் உத்தரவிட்டது. மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அங்கு குளிர்காலம் வருகிற நிலையில் இப்போதே மக்கள் பட்டினி கிடப்பதாகவும், பட்டினிச்சாவுகள் நேரிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தாவி உள்ள குடும்பங்கள், தங்கள் குடும்பத்தினர் வடகொரியாவில் பட்டினியால் தவிக்கின்றனர் என கூறி உள்ளனர்.
‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் (Lee Chang Yang) கருத்துத் தெரிவிக்கையில்,
“தெருக்களில் அனாதை குழந்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பட்டினியால் இறப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. அடித்தட்டு மக்கள் மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு பொருட்கள் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது என தெரிவித்தார்.
வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது.
வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர். அறுவடை மூலம் கிடைக்கிற ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது இழப்புகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் (Lee Chang Yang) தெரிவித்துள்ளார்.
அறுவடையின் போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் வடகொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது