கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றதுடன்,யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,இதன் காரணமாக நாட்டு மக்கள் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவது குறித்து பாரிய அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
அந்த வகையில்,நாட்டில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் கூட எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும் , இதுவே வெடிப்பு சம்பவங்கள் பதிவாக காரணம் என்றும் பொது மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காணொளியொன்றினை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சமையல் எரிவாயு சிலிண்டரை மூடிய பின்னர் அதன் குழானியை தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் இடும் போது அதில் வாயு குமிழிகள் உண்டாவதை காண்பித்துள்ளதுடன்,சிலிண்டர் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் வாயு வெளியேறுகின்றமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலிண்டரை திறந்து அதன் பின்னர் குழாயை தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் இடும் போது மிக வேகமாக நீர் குமிழிகள் உருவாகின்றமையையும் அவர் காண்பித்துள்ளார்.
அத்தோடு சிலிண்டரிலிருந்து வாயுவானது அடுப்பிற்கு செல்லும் குழாயை முற்றாக அகற்றி , சிலிண்டரின் வாய்ப்பகுதியில் நீரை ஊற்றும் போது நீர் பொங்கி வழிகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிலிண்டரில் வாயு அழுத்தம் அதிகரித்துள்ளமையால் , பாவனையில் இல்லாத போதிலும் கூட வாயு கசிவதோடு , தொடர்ச்சியாக இடம்பெறும் வாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக அசேல சம்பத் சுட்டிக்காட்டுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.