இலங்கையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களை செய்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதற்கமைய கடந்த ஜூலை மாதம் அதன் பல மாதிரிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் ஐ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே காணப்பட்ட நிலையான அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளிக்காமையினால் அந்த சிலிண்டர்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் தற்போது சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் கலவையானது நிலையான தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.