எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை மூட அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அரசாங்க பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் நாட்டை மூடி வைக்கும் எதிர்பார்ப்பு ஒன்று அரசாங்கத்திடம் இல்லை. மிகவும் நெருக்கடியுடன் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் நாட்டை மீண்டும் திறந்துள்ளோம். எனினும் இதனால் கோவிட் தொற்றாளர்களை முற்றாக கட்டுப்படுத்தி விட்டோம் என எங்களால் கூற முடியாது.
இந்த நாட்டில் அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்றே கூற வேண்டும்.
நாட்டில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் நத்தார் காலப்பகுதியில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, நாட்டை முடக்கவிடாமல் பொறுப்புடன் மக்களே செயற்பட வேண்டும்.
நாட்டின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும் என வைத்தியர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண்டுள்ளார்.