நைஜீரியாவில் சுமார் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
வறுமையான நாடுகளிடையே தடுப்பூசிகள் உரிய முறையில் பகிரப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அடிக்கடி குற்றம் சுமத்தி வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தொற்றில் அதிகரிப்பு குறித்தும் அது எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சுமார் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.
இவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் எஸ்ட்ராசெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளையே நைஜீரிய அரசாங்கம் அழித்துள்ளது.
நைஜீரியாவில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதாலும் தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது இதன் காரணமாகவே தடுப்பூசிகள் காலாவதியாகி வருகின்றன.