ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கத் தலைவர்கள் தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் இருந்து தப்பிக்க வெளிநாடு சென்ற வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையம் ஊடாக இலங்கைக்கு அழைத்து வந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர் தனது அமைச்சர் பதவியை இழக்க வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வர்த்தகரை பொலிசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்த போது அவர், சில காலத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பிரமுகர் முனையத்தின் ஊடாக குறித்த வர்த்தகர் இந்த அரசியல்வாதிகளுடன் அண்மையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அரசியல்வாதிகள் ஊடாக பொலிஸில் சரணடைந்த குறித்த வர்த்தகர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.