இலங்கையில் கோவிட் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி பெறுவதை தடுத்த மற்றும் தடுப்பூசி பற்றிய கட்டுக்கதையை பரப்பிய எட்டு குழுக்கள் மீது அரசாங்க புலனாய்வு பிரிவு ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தக் குழுக்களில் பல்வேறு தீவிரவாத மதக் கோட்பாடுகளைக் கொண்ட மூன்று குழுக்கள் மற்றும் பல சமூக வலைத்தள இணையத்தளங்களும் உள்ளதாக அரசாங்க புலனாய்வு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் தொடர்பான விசேட அறிக்கை அடுத்த வாரம் அரசாங்கத்திடமும் பொலிஸ் மா அதிபரிடமும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போது, நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி பெறும் நபர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 44 சதவீதம் (62,14,639 நபர்கள்) மாத்திரமாகும்.
இது போதுமான எண்ணிக்கை இல்லை எனவும், கோவிட் நோயை உகந்த அளவில் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்பப் பணிப்பாளரும், கோவிட்19 இணைப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகள் இந்த எண்ணிக்கையை நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.