முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட விசா திட்டமான கோல்டன் பெரடைஸ் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கோல்டன் பெரடைஸ் விசா
கோல்டன் பெரடைஸ் விசா மூலம் சொர்க்க தீவில் நீண்ட கால அனுபவத்தை அனுபவிக்கலாம் என்ற திட்டத்தில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு செய்ய, வாழ மற்றும் படிக்கவும் இந்த கோல்டன் பெரடைஸ் குடியுரிமை விசா திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்போது, கோல்டன் பெரடைஸ் விசா திட்டத்திற்கான இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஸ்சந்திர உட்பட அவரது ஊழியர்களை பாதுகாப்பு செயலாளர் பாராட்டியுள்ளார்.
பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்
இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தகவல்களுக்கமைய, முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிரந்தர நன்மைகளை வழங்கும் திட்டமாக இது காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.