சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கடந்த சில மாதங்களாக, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய, மூன்று முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களுடன், கடன் மறுகட்டமைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
விரைவில் சாதகமான பதில்
இந்தநிலையில் அந்த நாடுகள், விரைவில் சாதகமான பதிலை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்காலிக உடன்படிக்கையில் நுழைந்த காலத்திலிருந்து, சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை இந்தியா அடிக்கோடிட்டுக் காட்டியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டிருந்தாலும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்பட்டதால், அது தோல்வியடைந்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அக்டோபரில் நடைபெற்றமை மற்றும் சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளை காட்டி, சீனாவுடனான பேச்சுவார்த்தை சிறிது தாமதமானது என்று ஆளுநர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் கடனாளர்களிடமிருந்து பெருமளவில் கடன்
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை பெறமுடியாமைக்கு சீனாவின் தாமதம் மாத்திரம் காரணம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடன் வழங்குனர்களிடம் இருந்து உத்தரவாதம் கிடைத்தால், சர்வதேச நாணய நிதியம், கடன் வழங்கலை அங்கீகரிக்க, நான்கு முதல் ஆறு வாரங்கள் செல்லும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு கடன்களுக்கு மேலதிகமாக, இலங்கை நாடு பல ஆண்டுகளாக தனியார் கடனாளர்களிடமிருந்து பெருமளவில் கடன் பெற்றுள்ளது.
இது நாட்டின் மிகப்பெரிய வெளிப்புறக் கடன் மூலமாகும். எனினும் சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் ஆரம்பித்த பின்னரே வணிகக் கடன் வழங்குபவர்களுடனான உண்மையான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பொருளாதார வல்லுநர்கள் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான பாதையில் இருப்பதாக வாதிடும் அதே வேளையில், சுற்றுலாத்துறையில் இருந்து கிடைக்கும் வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.