நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகளை நடத்தப்படும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் முழுமையான பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவாலயங்களுக்கு வரும் நபர்களை அடையாளம் காண நடவடிக்கை
அனைத்து தேவாலயங்களுக்கும் பொறுப்பான கத்தோலிக்க மத குருமார் மற்றும் கிறிஸ்த திருச்சபைகளின் போதகர்களுடன் கலந்துரையாடி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் நத்தார் பண்டிகை காலத்தில் தேவாலயங்களின் அறங்காலர் சபையை உருவாக்கி, தேவாலயங்கங்களுக்குள் வரும் சந்தேகத்திற்குரிய மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேல் மாகாணத்தில் நத்தார் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும் பிரதான தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வெளிமாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட உள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் உட்பட முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக இலங்கையில் கிறிஸ்தவ பண்டிகைகளின் போது தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.