திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.
தாய் எப்படிக் கிடைப்பாள்?
குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார். இந்தப்பிள்ளையின் தாய்க்கு இன்னொரு மகள் கூட இருப்பார். தாயில்லாத இந்த இரு பாலகர்களுக்கும், தாய் எப்படிக் கிடைப்பாள்?” வீதியிலேயே கருகும் கனவுகளுக்கும், வீடுகளில் கதறித்தீராத கண்ணீருக்கும் யார் பதிலளிப்பது?
இதே விபத்தில் பத்து வயது மாணவி ஒருவரின் கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமைய போகிறது .
எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்படியான அதிவேக போக்குவரத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகின்றதோ.